திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், மல்லையா நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்புக்கு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் தனியார் பன்றிப்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குடிநீரில் கலப்பதால் பல்வேறு வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த பன்றிப்பண்ணையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பன்றிப்பண்ணையை அகற்ற வலியுறுத்தி பேரணியாக சென்று பன்றி பண்ணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு செயல்பட்டு வரும் பன்றிப்பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் தாங்கள் தோல்வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குடிநீர் நச்சுத்தன்மையாக மாறி விட்டதால் குடிக்க தண்ணீர் கூட விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு முறை போராட்டம் நடைபெறும் போதும் அதிகாரிகள் வந்து சமரசம் செய்து செல்வது வாடிக்கையாகி வருவதாகவும், கொட்டும் மழை என்றும் பாராமல் வீடுகளை கூட இடிக்கும் அதிகாரிகள், பன்றி பண்ணையை அகற்ற தயங்குவது ஏன் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சார் ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பன்றிப் பண்ணையை அகற்றி விடுவதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
