தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் நடைபாண்டில் முதல் முறையாக கலை பண்பாட்டு துறை கோவை மண்டலம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி நடத்தப்படுகிறது. திருப்பூர் எல் ஆர் ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இந்த கண்காட்சியானது இன்று துவங்கியது.

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்கள் இந்த கண்காட்சியானது நடக்கிறது. இந்த கண்காட்சியில் 40 கலைக்குழுவினர் சார்பில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியின் முடிவில் குலுக்கல் முறையில் சிறந்த கலை படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது முதல் பரிசாக 5000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் ஏழு பேருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில் ஓவியர்களின் கைவண்ணத்தில் ஏராளமான வித்தியாசமான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக மைக்ரோ போர்ட் ரைட் ஓவியம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. ஒரு சென்டிமீட்டர் அளவில் மகாத்மா காந்தி ஓவியம், அசோகச் சின்னம், பெரும் தலைவர்களின் உருவப்படம் வரையப்பட்டிருந்தது. ஒரு சென்டி மீட்டர் அளவில் ஓவியங்கள் வரையப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.

இதேபோல் போர்ட் ரைட் ஓவியங்கள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. முதல் நாளான இன்று ஏராளமான கல்லூரி மாணவிகள் இந்த கலை ஓவியங்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நாளையும் இந்த ஓவியக் கண்காட்சி ஆனது நடக்கிறது பொதுமக்கள் இலவசமாக இதனை கண்டு மகிழலாம்.