நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழப்பத்தையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. பள்ளியில் நேற்று சுகாதார மருத்துவ துறையின் சார்பில் சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கி உள்ளனர். இந்நிலையில் மாலை இடைவேளையின் போது 4 பேரும் விளையாட்டுக்காக யார் சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிடுவது என்று போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாணவன் சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்தபெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும், வெற்றி மதன் 4 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.பின்னர் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்ட நிலையில், வீட்டிற்கு சென்றதும் 4 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் வயிற்று வலியும் ஏற்பட்டது. இதனால் பதறிய பெற்றோர்கள் 4 பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சந்துரு, நந்த பெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரேஷ், வெற்றிமதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து களக்காடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக அதிக அளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.