உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மதியனூர் ஐயப்பன் கோவிலில் பூட்டை உடைத்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் ஆகியவற்றை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மதியனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோவிலை அதே கிராமத்தைச் சேர்ந்த குருசாமி காமராஜ் என்பவர் வழிபாடு நடத்தி வருகிறார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கும் காலங்களில் மட்டுமே மதியனூர் ஐயப்பன் கோவிலிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த கோவிலின் அருகிலுள்ள விவசாய மின் மோட்டார் களில் இருந்த ஒயர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் குருசாமி காமராஜ் இன்று காலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று பார்த்த பொழுது கோவிலில் இருந்த மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் கோவிலுக்குள் இருந்த படையல் செய்யும் பொருட்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்ட ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள படையல் சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது

இது குறித்து காமராஜ் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டி இருந்த ஐயப்பன் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து படையல் சாமான்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.