இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதிலும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். இந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதவிர முந்தைய கல்வி ஆண்டுகளுக்கான நிலுவை என சுமார் ரூ.600 கோடி நிதியானது மத்திய அரசால் வழங்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் (2025-26) தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் மத்திய அரசு இதுவரை தனது பங்கு நிதியை ஒதுக்கவில்லை. இதனால் இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களில் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடனடியாக மத்திய மாநில அரசுகள் நிதியை விடுவித்து இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்தனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
