ஒருங்கிணைந்த திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி, தெற்கு மாநகர தி.மு.க. இளைஞரணி சார்பில், இந்தி திணிப்பு, தமிழகத்திற்கு நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு மூலம் அநீதி செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, திருப்பூர் ராக்கியாபாளையம் சேரன்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் தலைமை தாங்கி பேசினார். துணை அமைப்பாளர் விக்னேஷ் குமார் வரவேற்று பேசினார். வடக்கு மாநகர பொறுப்பாளரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஈ.தங்கராஜ் முன்னிலை வகித்தார்.


இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஏராளமான திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக மகளிருக்கு அதிக அளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக கொண்டு வந்துள்ள திட்டங்களை வட மாநிலங்களில் தேர்தல் அறிக்கையாக அறிவித்து வருகிறார்கள். பிரதமர் செய்யும் வேலையை முதல்வர் செய்கிறார். முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.


இதன் பின்னர் மேயர் தினேஷ்குமார், ஊடகவியலாளர் செந்தில்வேல், தலைமை கழக இளம் பேச்சாளர் விஜயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் தெற்கு மாநகர துணை செயலாளர் பாஸ்கரன், துணை அமைப்பாளர்கள் அரவிந்த், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு மாநகர துணை அமைப்பாளர் தியாகு நன்றி கூறினார். முடிவில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்தனர்.


முன்னதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் பேசியதாவது:-
ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்தியாவிலேயே ஒன்றிய அரசுக்கு அதிக வரி வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. ஆனால் நம்மிடமிருந்து வரியை வாங்கிக்கொண்டு அதனை ஒன்றிய அரசு திருப்பி தருவதில்லை. பல கோடி ரூபாய் பணம் தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. தற்போது மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்க்கும் தமிழக அரசுக்கு கல்விக்கான நிதியை வழங்க மறுத்து வருகிறது. தற்போது நடிகர் விஜய் புதியதாக கட்சி தொடங்கியுள்ளார். அவர் திராவிட வரலாறு, மு க ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். அவருக்கு தக்க பதிலடி வருகிற தேர்தலில் கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.