சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர், மாங்குடி பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை. இருவர் கைது 3 வாகனங்கள் பறிமுதல்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் , மாங்குடி பாலாற்று பகுதியிலும், அருகிலுள்ள தனியார் நிலங்களிலும் ஆற்று மணல் கிராவல் கொள்ளை அடிக்கடி நடப்பதாக கண்டவராயன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் கண்டவராயன்பட்டி சார்பு ஆய்வாளர் ஸ்ரீதர் போலீசாருடன் ஆற்றுப்பகுதியில் திடிரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளிக்கொண்டிருந்த காரையூரை சேர்ந்த ஆனந்தகண்ணன் (23) அதோ ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் திருட பயன்படுத்திய ஜேசிபி , டிராக்டர், ஈச்சர் ஆகிய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த வாகனங்களின் உரிமையாளரான மாங்குடி முருகன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான முருகனைத் தேடி வருகின்றனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு இதே பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் கைது செய்து, மணல் திருட பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.