திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் சுற்றித்திரிந்த ஒரு வெறிநாய், இரண்டு வயது பெண் குழந்தை உட்பட பத்துக்கும் மேற்பட்டோரைத் துரத்தித் துரத்திக் கடித்துள்ளது.
இதில், காயமடைந்த ஐந்து பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,
தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில், பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த அம்சள்ளி – முருகன் தம்பதியரின் இரண்டு வயது மகள் ரக்சிதா, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது குழந்தையின் வலது முக தாடையிலும், வலது கையிலும் கடிபட்டுள்ளது. மேலும், சிவகங்கா – கோபாலகிருஷ்ணன் தம்பதியரின் 37 வயது மாற்றுத்திறனாளி மகள் ரோஷினிக்கு முகம் முழுவதும், 55 வயது காளி என்பவருக்கு இரு கால்களிலும், 60 வயது சக்கரை என்பவருக்குக் கால் பகுதிகளிலும், மற்றும் 25 வயது தண்டபாணி என்பவருக்கு முதுகு பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டோரை ஆக்ரோஷமாகக் கடித்துக் குதறிய இந்த வெறிநாயை, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மக்களின் பாதுகாப்பைக் கருதி துரத்தி அடித்துக் கொன்றனர்.
நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தெருநாய்கள் அதிகரித்து கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால், சாலைகளில் நடந்து செல்லும் மக்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும்
அச்சமடைந்துள்ளனர். நாய்கள் பின் தொடர்ந்து துரத்துவதாலும், சில நேரங்களில் குறுக்கே வந்து விபத்துகளை ஏற்படுத்துவதாலும் உடல் ஊனம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகளில் நாய்களுக்கான கருத்தடைகளை மேற்கொள்ளப்படாமல் அலட்சியம் காட்டி வருவதால் நகர மற்றும் கிராமப்புறங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து பொதுமக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் விபத்தை ஏற்படுத்தியும் பெரும் அச்சுறுத்தலை தந்து வருகிறது இனியாவது நாய்கள் அதிகரிக்காமல் இருக்க அரசு உடனடியாக ஞாயிறு கருத்தடையை செய்து தெரு நாய்களின் அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
