பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வினித் என்ற மணமகனுக்கும், கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த தாரணி என்ற மணப்பெண்ணுக்கும் இன்று காலை கண்ணாம்பாளையத்தில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து மறு வீடு அழைப்பிற்காக காரில் செல்லாமல் புதுமண தம்பதி பாரம்பரிய முறைப்படி மாமியார் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டனர்.இதனை அடுத்து புது மாப்பிள்ளை யான சஞ்சய் வினித் தனது மனைவி தாரணியை கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இரட்டை காளை பூட்டிய மாட்டு வண்டியில் அழைத்து சென்றார்.
மாப்பிள்ளை முண்டாசுகட்டி,புதுப்பெண் தாலி கட்டி மாலையும் கழுத்துமாக நகர்வலமாக ஊர்வலம் வந்தது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இதனை கிராமப் பகுதியில் உள்ள மக்கள் வியந்து பார்த்தனர்.மேலும் பாரம்பரிய முறையை பறைசாற்றும் விதமாக புதுமண தம்பதியர் எடுத்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
