ஏற்காடு மலையில் உள்ள பல்வேறு குக்கிராமங்களுக்கும் நடந்தே சென்ற மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மக்களை தேடி மருத்துவம் குறித்து பழங்குடியினர் மக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று அதிகாலையிலேயே சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு குக்கிராமங்களுக்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். மாரங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மத்தூர் மலை கிராமத்தில் வீடு வீடாக சென்று பழங்குடி இன மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவர்கள், செவிலியர்கள் வருகிறார்களா? , மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பழங்குடி இன மக்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கு அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக மருத்துவர்களும் செவிலியர்களும் முறையாக வந்து மருந்துகளை விநியோகித்து தங்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்வதாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அமைச்சருடன் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் யோகானந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
