திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் சென்னை வெளிவட்ட சாலை மற்றும் சென்னை எல்லை சாலை பணிகளுக்காக செம்மண் குவாரிக்கு அண்மையில் கனிமவளத்துறை அனுமதி வழங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருவதாகவும் தற்போது குவாரி செயல்படத் தொடங்கினால் அங்கு தங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்காது என்பதால் குவாரி செயல்படக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக இன்றும் கிராம நிர்வாக அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.