
திருப்பூர் தொகுதி எம்.பி., கே.சுப்பராயன் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமான முறையில் மத்திய அரசு தொடர்ந்து இயங்கி வருகிறது. காசித் தமிழ்ச்சங்கம் பெயரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது. பொறுப்புள்ள இடத்தில் இருந்துகொண்டு பொறுப்பற்ற பேச்சை கல்வி அமைச்சர் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டு கல்விக்கு அளிக்க வேண்டிய ரூ. 2153 கோடியை நிதியை விடுவிக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை, மாநிலங்களுக்கு எதிரான போர் பிரகடனம் போல் தெரிகிறது. தமிழ்நாடு இதனை சந்திக்கும். போராடும். முறியடிக்கும். மத்திய பட்ஜெட் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் உரியது அல்ல. பிகார் மாநிலத்துக்கான பட்ஜெட்டாக உள்ளது. 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் கிராமங்களில் மலையாளி என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மலைவாழ் மக்களாக உள்ளனர். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் அவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்குவதில்லை. இது தொடர்பாக 2 முறை மக்களவையில் பேசியும், நடவடிக்கை இல்லை. மத்திய அரசு செய்து தர வேண்டும். அந்நிய செலவாணியை அதிகம் ஈட்டித்தரும் நகரமாக திருப்பூர் உள்ளது. அந்நிய செலவாணி மூலம் வருவாய் ஈட்டும் மத்திய அரசு, திருப்பூர் உட்கட்டமைப்பை நிறைவேற்ற தேவையான நிதியை மத்திய அரசு செய்ய வேண்டும்.
மத்திய அரசை விமர்சித்ததால், இன்றைக்கு விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாக கை, கால்களில் விலங்கிடுவது அநாகரீக முறைதானே. ட்ரம்பை கண்டால் அஞ்சி நடுங்கும் பிரதமராக மோடி உள்ளது தான் வெட்கக்கேடு. தீஷா கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம். கால்நடைகளை வேட்டையாடும் தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது.
தமிழ்நாடு அரசு இதற்கு செவிசாய்த்து, உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
