கரூரில், பிரபல ரவுடி பென்சில் தமிழரசன் என்ற குற்றவாளியை இரவு போலீசார் சுட்டு பிடித்தனர்.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பென்சில் தமிழரசனை பிடிக்க இரவு கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுட்டு பிடித்துள்ளனர். இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.கரூர் சின்ன ஆண்டான் கோவிலைச் சேர்ந்த பென்சில் என்ற தமிழரசன் தனது கூட்டாளிகளான பிரகாஷ், மனோஜ் ஆகியோருடன் நேற்று முன்தினம் குடிபோதையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே மலையாளம் என்பவருடன் சண்டையிட்டு அவரை கட்டையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுட்டுள்ளார்.இந்த தகவலை அறிந்த கரூர் நகரப் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், பிரகாஷ் ஹரிகரன், மனோஜ் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியான பென்சில் என்ற தமிழரசன் தலைமறைவாகி விட்டார்.இந்த நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கரூர் அரிக்காரம் பாளையம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் பென்சில் என்ற தமிழரசன் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் போலீசார் தமிழரசன் பிடிக்க சென்ற போது தமிழரசன் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து ஆய்வாளர் மணிவண்ணன் தப்பி ஓடிய தமிழரசனின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்துள்ளார்.துப்பாக்கி சூட்டில் காலில் காயமடைந்த தமிழரசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.கரூரில் பிரபல ரவுடி ஒருவரை போலீசார் சுட்டு வெடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.