மலைப்பகுதிகளில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக நேற்று இரவு முதல் பத்திற்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்நிலையில் அப்சர்வேட்டரி செல்லும் சாலையில் உள்ள செம்மண் மேடு அருகே நேற்று இரவு நேரத்தில் தனியார் இடத்தின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பம் மீது ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பம் மற்றும் மின் கம்பிகள் சேதம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக அப்சர்வேட்டரி, செல்லபுரம், புதுக்காடு, பேரி பால்ஸ், செம்மண் மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேற்று இரவு முதல் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மரங்களை அகற்றி விரைவில் மின்சாரம் கொடுக்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல காற்று அதிகமாக வீசி வரும் நிலையில் பூம்பாறையில் இருந்து மன்னவனூர் செல்லக்கூடிய மின்சார வழிதடத்தில் மரங்கள் முறிந்து விழுந்து வருவதால் நேற்று இரவு முதல் பத்திற்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 20கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் தடைப்பட்டுள்ள மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.