திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், திருப்பூர் சாலையில் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் கோவை சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றுவதும், இறக்குவதும் வழக்கம். இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
அப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.
அதே பகுதியில், ரெட் டாக்ஸி டிரைவர்கள் ஆன்லைனில் புக் செய்யாத பயணிகளை அந்த இடத்தில் நின்று ஏற்றி செல்வதாகவும், இதனால் அங்கு செயல்பட்டு வரும் ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாகவும் கூறி ரெட் டாக்ஸி டிரைவர்களுக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பல நாட்களாக மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பயணி ஒருவரை ஏற்ற ரெட்டாக்சி டிரைவர் சக்திவேல் என்பவர் தனது டாக்சியுடன் வந்து காத்திருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஆன்லைன் புக்கிங் இல்லாமல் பயணிகளை நேரடியாக ஏற்றக்கூடாது என கூறி ரெட் டாக்ஸி டிரைவர்களுக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, இன்று அவிநாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஆட்டோ டிரைவர்கள் அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமரன் இடம் நேரில் சந்தித்து ரெட் டாக்ஸி டிரைவர்களால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ரெட் டாக்ஸி டிரைவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கினர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உறுதி அளித்ததை அடுத்து, தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் இடம் நேரில் சென்று ரெட் டாக்ஸி டிரைவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளித்தனர்.
ரெட் டாக்சி டிரைவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கோரி ஆட்டோ டிரைவர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு.
