சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு பாசன கண்மாய்களில் வேருடன் கருவேலமரங்கள் அகற்றப்படுவதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு விவசாயத்தை அழித்து வருகின்றன. பகல் முழுவதும் கருவேல மர காட்டினுள் பதுங்கியுள்ள இவைகள் இரவில் வயல்களில் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதால் சாகுபடி பரப்பரளவு குறைந்து வருகிறது. கருவேல மரங்களை வேருடன் அகற்றினால் மட்டுமே பன்றிகளை ஒழிக்க முடியும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து சிவககங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. சிறுபாசன கண்மாய்களுக்கு புத்துயிர் ஊட்டுதல் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 442 கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை 34 கோடியே 30லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் அந்தந்த பகுதி கண்மாய் விவசாயிகளின் பங்களிப்புடன் அகற்ற முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. மாவட்டத்தில் அதிகபட்சமாக காளையார்கோயில் தாலுகாவில் 80 கண்மாய்களில் ஏழு கோடியே 87 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவிலும், குறைந்த பட்சமாக மானாமதுரை தாலுகாவில் 23 கண்மாய்களில் ஒரு கோடியே 79 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலும் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. திருப்புவனம் தாலுகாவில் 30 சிறுபாசன கண்மாய்களில் இரண்டு கோடியே 77 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் வேருடன் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள வலையனேந்தல் கண்மாயில் வேருடன் கருவேல மரங்கள் அகற்றப்படுகின்றன. 700 மீட்டர் தூரத்திற்கு வரத்து கால்வாயும் தூர் வாரப்படுகிறது. கண்மாய்களில் கருவேல மரங்கள் அகற்றப்படுவதுடன் கூடுதலாக மா, புளி, வேம்பு உள்ளிட்ட பலன் தரும் மர வகைகளை வளர்த்து பராமரிக்க வேண்டும், மரங்கள் வளர்த்தால் மீண்டும் கருவேல மரங்கள் வளராது. விவசாயி சங்க பிரமுகர் ஆதிமூலம் கூறுகையில் மாவட்டம் முழுவதும் பணிகள் நடந்து வரும் நிலையில் வேருடன் கருவேல மரங்களை அகற்றும் போது பன்றிகளையும் ஒழித்து விடலாம், தற்போது சிறுபாசன கண்மாய்களில் பணிகள் நடந்து வரும் நிலையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாய்களிலும் கருவேல மரங்களை வேருடன் அகற்றி புதிய பயன்தரும் மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும். புளிய மரங்களை வளர்த்தால் எதிர்காலத்தில் அவற்றை குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்றார்.
