கோவை, சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் நேற்று விடுதிக்கு பணி முடிந்து சென்றுள்ளனர். அப்போது, அவர்களை சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நீண்ட தூரம் பின் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த பெண்கள் வேகமாக விடுதிக்கு ஓடிச் சென்றுள்ளனர்.

இதனிடையே அந்த நபரை வெளியே இருந்த தனியார் நிறுவன காவலாளி அருணாச்சலம் என்பவர் தடுத்து நிறுத்தி விசாரித்த போது, மது போதையில் இருந்த அந்த நபர் காவலாளியை தாக்கி விட்டு விடுதிக்குள் செல்ல முயன்றுள்ளார். மர்ம நபர் தாக்கியதில் காயமடைந்த காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த விடுதி உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடிய போது, அந்த அதே நபர் அதே பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை தேடிச் சென்ற போது, அவர் அதே பகுதியில் உள்ள எச்.ஆர். ரெசிடென்சி என்ற தனியார் ஹோட்டலில் பணியாற்றி வரும், அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மடக்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் அங்கிருந்த அறை ஒன்றில் அடைத்தனர். காலையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என சென்ற போது, அந்த அந்த தொழிலாளி அறையில் இருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிய அசாம் தொழிலாளி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.