கோவையில் பூங்கொத்து விற்கும் நவீன இயந்திரம் கோவை விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. கோயமுத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் விதமாக தானியங்கி மலர் கொத்து இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சொந்தங்களை வரவேற்கும் விதமாகவும், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் போன்றவர்களை வரவேற்கும் விதமாகவும் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த இயந்திரம் மூலம் பயணிகள் தங்களுக்கு விருப்பமான மலர் கொத்துக்களை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இயந்திரத்தில் உள்ள திரையில் தங்களுக்கு தேவையான மலர் கொத்தின் விலையைத் தேர்ந்தெடுத்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மலர் கொத்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
800 ரூபாய் முதல் 5,000 அதற்கு மேல் தேவைப்படும் விலைக்கு ஏற்றார் போல் பல்வேறு வகையான மலர் கொத்துக்கள் இந்த இயந்திரத்தில் கிடைக்கின்றன. இந்த புதிய முயற்சிக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
குறிப்பாக, அவசர பயணங்களின் போது மலர் கொத்துக்கள் வாங்க நேரம் கிடைக்காதவர்களுக்கு இந்த இயந்திரம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் இது விமான பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.