வார விடுமுறை நாளான இன்று சென்னையிலிருந்து 8 பேர் கொண்ட குழு ஒன்று ஆந்திர மாநிலம் வரதயபாளையம் நீர்வீழ்ச்சிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் பெரியவேடு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநிலம் தடா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.