நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் வயது 60. இவர் நெல்லை மாவட்ட கிழக்கு காங்கிரஸ் தலைவராக இருந்தார்.இந்நிலையில் கடந்த 2024ல் மே 2ம் தேதி ஜெயக்குமார் காணாமல் போனதாக உவரி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வந்த நிலையில் 2 நாட்கள் கழித்து மே 4ம் தேதி கரை சுத்து புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் கை கால்கள் கம்பியால் கட்டப்பட்டு எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.இதையடுத்து அவரது மர்ம மரணம் குறித்து 10க்கும் மேற்பட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.இந்த வழக்கின் ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் ஜெயக்குமார் கைப்பட எழுதியதாக கூறப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் உறவினர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.இவ்வழக்கில் விஞ்ஞானபூர்வமாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ஓராண்டுக்கு மேலாகியும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை முடிவு எட்டப்படாததால் திணறி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று கரை சுத்துப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்விளை கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் வீட்டில் வைத்து 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களை அழைத்து சி பி சி ஐ டி காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
