முசிறி அருகே அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டி பெண் துறவிகளைக் கொண்டு சிறப்பு யாகவேள்வி –
முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு .

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு தொற்றி வருகிறது.
அந்த வகையில் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் நிற்கும் நிலையில் உட்கட்சி பூசல்,கூட்டணியில் குழப்பம்,
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களினால் ஏற்படும் தொந்தரவு , ஆளுங்கட்சியின் சவால்கள், ஒன்றிய அரசின் நெருக்கடி என அதிமுக கட்சியின் தலைமை பல்வேறு சவால்களை அன்றாடம் சந்தித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பூரண ஆயுள் பலம் பெற வேண்டும்,
2026 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என
யாக வேள்வி பிரார்த்தனை, அன்னதானம், கோபூஜை,
வஸ்திர தானம் என அதிமுகவினர் முசிறி பகுதியில் களம் இறங்கியுள்ளது அப்பகுதி அரசியலில் சற்று
பரபரப்பைதான் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முசிறி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செல்வராஜ் கட்சியின் மேலிடத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் விதமாகவும் ,
எடப்பாடியை செண்டிமெண்டாக டச் செய்யும் விதமாக ஒரு யாக வேள்வியை நடத்தி முடித்துள்ளார்.

முசிறி அருகே உள்ள திருஈங்கோய் மலை.பிரசித்தி பெற்ற இம்மலையின் ஒரு பகுதியில் ஸ்ரீ லலிதாம்பிகை என்ற பெயரில் யோகினிகளால் (பெண் துறவிகள்) நடத்தப்படும் மடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சிறப்பு பூஜைகள், வேத பாட வகுப்புகளும் நடைபெறுகிறது.துறவு வாழ்க்கை போன்று இறைவழிபாட்டை நடத்தும் யோகினிகள்
இங்கு வசித்து வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ரெங்கசாமி இன்றளவும் அவ்வப்போது வருகை தந்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் ஏற்பாட்டின் படி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் 71-வது பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ள நிலையில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில்
யாக வேள்வி நடத்தப்பட்டது.
யாக வேள்வியில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, அண்ணாவி, வளர்மதி, பூனாட்சி முன்னாள் கொறடா மனோகரன், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பட்டு அங்க வஸ்திரம், வர்ணமாலைகள் அணிந்து யாக குண்டத்தை சுற்றி அமர்ந்து பெண் துறவிகள் நடத்திய யாக வேள்வியில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கணபதி பூஜை, கோபூஜை, நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தடைகள் நீங்கவும், நல்வாழ்வு பெறவும், கிரக தோஷங்கள் நீங்கவும், நட்சத்திர ஹோமமும்,
ஆயுள் வளம், உடல் நலம், மன அமைதி, சத்துரு பயம் நீங்குதல், மற்றும்
உயர் பதவி கிடைத்தல் ஆகியவைக்கு
மிருத் யுஞ்சய ஹோமமும் நடைபெற்றது. மிகப்பெரிய யாக குண்டத்தில் பெண் துறவிகள் நவதானியங்கள், பழ வகைகள், ஹோம சாமான்கள், வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள், தேன், திரவியம், ஆகியவற்றை போட்டு வேத மந்திரம் கூறி யாக வேள்வி நடத்தினர். அப்போது கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும், அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
அதிமுகவிற்கு அவ்வப்போது ஏற்படும் நெருக்கடி நிலை சரியாகவும்
ஆட்சிக் கட்டிலில் அமரவும், யாகம் வளர்த்து தொண்டர்களையும் கட்சி மேலிடத்தை சென்டிமென்டாக டச் செய்துள்ள முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் -ன் செயல்பாடு முன்னணி நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கலகலப்பாகவே யாகத்தில் கலந்து கொண்டிருந்தனர்.பொதுவாக யாக வேள்விக்கு பின்னர் தானம் வழங்க வேண்டும் என்பது மரபு .அதனைப் பின்பற்றும் வகையிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பொது மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திமுக தலைமை
பூத் கமிட்டி அமைத்தல், அரசின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் விளக்கி கூறுதல்,
அதிருப்தியில் உள்ள தொண்டர்களை சரி செய்தல், வாக்கு வங்கியை வளப்படுத்துவது,
கூட்டணி கணக்கு
,ஒன்றிய அரசின் பாரபட்சத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது என களம் கண்டு வரும் நிலையில் அதிமுக யாக வேள்வி, வேட்டி சேலை என இறங்கி இருப்பது தீவிர அதிமுக விசுவாசிகள் மத்தியில் வேதனையையும், விரத்தியையும் ஏற்படுத்தி உள்ளது .