வடமாநில இளைஞரிடம் 6.75 லட்சத்தை பறிமுதல் செய்து நீலகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை.பிரபல இந்தி நடிகரும் முன்னாள் எம்பியுமான மித்தூன் சக்கரவர்த்திக்கு பெங்களூரு, உதகை, முசோரி, ஜோத்பூர் என பல்வேறு இடங்களில் முக்கிய நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 13-1-2025 அன்று இந்தி நடிகர் மித்தூன் சக்கரவர்த்தி பெயரில் உதகையில் உள்ள ஓட்டல் மேலாளர் செல்போன் எண்ணுக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி மூலம் தான் குன்னூரில் ஒரு முக்கியமான வேலை நிமித்தமாக பணியில் உள்ளேன், நான் இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்சினை உள்ளது. எனவே ஓட்டல் வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்றும், அந்தப் பணத்தை நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கூறப்பட்டு இருந்தது.இதற்கு பதில் அளித்த மேலாளர் ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.30 லட்சமும் உள்ளது என்று பதில் அளித்துள்ளார். இதை தொடர்ந்து முதல் கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தை உடனடியாக அனுப்புமாறு வாட்சப்பில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்து உள்ளது. இதையடுத்து ஓட்டல் மேலாளர் வங்கி கணக்கில் இருந்து 20 லட்சத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பியுளார்.மேலும் நிரந்தர வைப்புத் தொகையில் உள்ள ரூ.30 லட்சத்தையும், அதன் பின்னர் மற்ற கணக்குகளில் உள்ள ரூ.50 லட்சத்தையும் அனுப்ப சொல்லி வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்து உள்ளது. ஆனால் மறுநாள் மிதுன் சக்கரவர்த்தி வேறு ஒரு வேலை நிமித்தமாக மேலாளரை செல்போனில் தொடர்பு கொண்ட போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை நீங்கள் சொன்ன வங்கி கணக்குகுக்கு அனுப்பிவிட்டேன் என்று மிதுன் சக்கரவர்த்தியிடம் மேலாளர் கூறிய போது தான் மோசடி நடைபெற்றது தெரிய வந்தது.அதிர்ச்சி அடைந்த ஓட்டல் மேலாளர் உடனடியாக இது குறித்து உதகை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணம் மற்றும் மற்ற கணக்குகளில் இருந்த ரூ.80 லட்சம் தப்பியது. இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீனா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தன்னுடைய சகோதரியின் வங்கிக் கணக்கு விவரங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரவீன்குமார் (35) என்பவரை நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 95 ஆயிரத்து 500 யை மீட்டு உள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் அவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.