திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை அதிமுக பிரமுகரின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்த புகாரின் பேரில் வருவாய் ஆய்வாளர் ரவீந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சகாயநிர்மலா ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது. இதனையடுத்து வேலியை அகற்றி ஆக்கிரமிப்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக பிரமுகரின் மகனான போக்குவரத்து காவலர் குமார் காவல் சீருடையில் வந்து வருவாய் ஆய்வாளரை தள்ளிவிட்டு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தலைமை காவலர் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து செங்குன்றம் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை காவல் சீருடையில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.