நெல்லை மாவட்டத்தில் மென் பொறியாளர் கவின், ஆதிக்க சமுதாயப் பின்புலத்திலிருந்து வந்த சுர்ஜித் என்ற நபரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தரப்பில் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கத்தின் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமை மற்றும் ஆணவ படுகொலைக்கு எதிராக முழங்கினர். தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும், கவின் ஆணவ படுகொலைக்கு பின்புலத்தில் இருந்த, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாநில முதல்வர் மு க ஸ்டாலின் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி எஸ்டி ஆணையம் முறையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். சாதிய ஆணவ படுகொலைக்கு தற்போதையுள்ள சட்டம் போதுமென்று தமிழ்நாடு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், ஆணவ படுகொலை தடுக்க சிறப்பு சட்டமே ஏற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட ஆணவ படுகொலைகள் நடந்திருக்கும் நிலையில், சமதர்ம சமுதாயம் படைக்கும் வகையில் ஆணவ படுகொலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் முற்றிலும் தடுக்கும் வகையில், ஒன்றிய மாநில அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

