குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே கடற்கரை சாலை பகுதியில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அகஸ்டீன் என்பவர் சொந்தமாக அடுத்து, அடுத்து இரண்டு இடங்களில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் உணவகத்தில் துவரங்காடு பகுதியை சேர்ந்த வேணுகுமார் (32) என்பவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக கேசியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் உணவக உரிமையாளர் 2021 ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் அவருக்கு வேணு குமார் மிகவும் உதவிகள் செய்துள்ளார்.இதனால் உணவக உரிமையாளர் அகஸ்டீன் அவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இருந்துள்ளார்.இந்நிலையில் வேணுகுமார் தன் உரிமையாளர் தன் மீது வைத்த நம்பிக்கையை தனது சாதகமாக பயன்படுத்தி தனது சகோதரி மீனா துணையுடன் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டு கொடுக்கும் பணத்திற்காக உரிமையாளர் வைத்து இருந்த தனது வங்கி கணக்கிற்கான கியூ ஆர் கோடு ஸ்டிக்கரை மாற்றி விட்டு அதற்கு பதிலாக தனது வங்கி கணக்கு கியூ ஆர் ஸ்டிக்கரையும் அடிக்கடி மாற்றி வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 14 லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி செய்துள்ளார்.இந்நிலையில் உணவகத்தில் விற்பனை இருந்த போதிலும் பணம் வரவு குறைவாக இருந்து வருவதால் சந்தேகம் அடைந்த உணவக உரிமையாளர் இது குறித்து வேணுகுமாரிடம் கேட்டதற்கு முன்னுக்கு, பின்னாக பதில் கூறி விட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறி தலைமறைவு ஆகிவிட்டார்.இதனை தொடர்ந்து உணவக உரிமையாளர் அகஸ்டீன் தனது வங்கி கணக்கையும், தனது ஊழியர் வங்கி கணக்கையும் ஆய்வு செய்து மோசடியை உறுதி செய்தார். பின்னர் தன்னிடம் நம்பிக்கை துரோகம் செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த வேணுகுமார் மீதும் அவருக்கு துணையாக இருந்த அவர் சகோதரி மீனா மீதும் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான உணவக ஊழியர் வேணுகுமாரை தேடி வருகிறார்கள்.உணவகத்தில் நூதன முறையில் 14 லட்சம் ரூபாய் மோசடி செய்ததோடு தன் மீது நம்பிக்கை வைத்து இருந்த முதலாளியையும் ஏமாற்றிய ஊழியர் குறித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

