தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் சாலையை மறித்து நின்ற ஒற்றை யானையால் நள்ளிரவில் அச்சமடைந்த வாகன ஓட்டிகள்..
கர்நாடகாவில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிக்கு காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை நள்ளிரவில் வழிமறித்த ஒற்றை காட்டு யானை காய்கறிகளை கீழே தள்ளி ருசித்தபடி சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்..
கர்நாடக மாநில எல்லையான ஹனூர், அஜீபுரம், ராமாபுரம் உளளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பீன்ஸ், பீட்ரூட், முட்டைக் கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை அங்குள்ள விவசாயிகள் சரக்கு வாகனங்கள் மூலம் அந்தியூர் மற்றும் பவானி சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். அதன்படி நேற்றிரவு சரக்கு வாகனத்தில் சில விவசாயிகள் காய்கறிகளை ஏற்றி வந்த போது, இரு மாநில எல்லையான கர்கேகன்டி அருகே, சாலையை மறித்து நின்ற ஒற்றை யானை, சரக்கு வாகனத்தில் இருந்த காய்கறிகளை கீழே தள்ளி அவற்றை புசித்தன.
சாலையை மறித்தபடி நின்ற யானையால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பி யானையை விரட்ட முயற்சித்தனர். இதனால் இரு மார்க்கத்திலும் செல்ல முடியாமல் வாகனங்கள் நின்றன. சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்றபடி சாவகாசமாக காய்கறிகளை ருசித்த யானை அதன் பின் சாலையை கடந்து சென்றது. அதன் பிறகே நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கினர்..
