மின்வாரிய குடியிருப்புக்கு வாகனத்தில் சென்றவர்கள் புலியை பார்த்து பின் தொடர்ந்து சென்ற நிலையில் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்ற பின் வன பகுதிக்குள் சென்று மறைந்தது..
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி, மாயார், சிங்காரா சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலங்களாக புலிகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் மட்டுமே புலிகள் வனப்பகுதியை விட்டு சாலைகளுக்கு வந்து சுற்றி திரிந்த நிலை மாறி தற்போது பகல் நேரங்களிலும் மாலை நேரங்களிலும் சாலையில் நடந்து செல்வதை அடிக்கடி காண முடிகிறது.
இந்த நிலையில் மசினகுடியில் இருந்து சிங்கார நீர் மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரியும் புலி ஒன்று நேற்று இரவு சாலையில் நடந்து வந்தது. அப்போது மசினகுடியில் இருந்து சிங்காரா மின்வாரியத்தை நோக்கி சென்ற வாகனத்தைக் கண்ட அந்த புலி சாலையிலேயே திரும்பி நீண்ட தூரம் நடந்து சென்றது.
புலியை கண்ட வாகன ஓட்டிகள் புலியை பின்தொடர்ந்த நிலையில் அந்த புலி எந்த சலனமும் இன்றி கம்பீரமாக நடந்து சென்றது. ஒரு கட்டத்தில் வாகனத்தின் வெளிச்சத்தால் அந்த புலி வன பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சிங்கார சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக வாகனத்தில் இயக்குமாறு வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
