திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், திருப்பூர் சாலையில் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் கோவை சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றுவதும், இறக்குவதும் வழக்கம்.
இதனால் அப்பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
அப்பகுதியில் உள்ளூர் ஆட்டோ ஓட்டுனர்கள் பயனிகள் வந்து செல்லும் நேரம் அறிந்து அப்பகுதியில் வழக்கமாக வாடகைக்கு ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர்.
அதே பகுதியில், ரெட் டாக்ஸி டிரைவர்கள் ஆன்லைனில் புக் செய்யாத பயணிகளை அந்த இடத்தில் நின்று ஏற்றி செல்வதாகவும், இதனால் அங்கு உள்ள ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறி ரெட் டாக்ஸி டிரைவர்களுக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பல நாட்களாக மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று பயணி ஒருவரை ஏற்ற ரெட்டாக்சி டிரைவர் சக்திவேல் என்பவர் தனது டாக்சியுடன் வந்து காத்திருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை ஏற்றக்கூடாது என கூறி சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தகவலறிந்து திருப்பூர் , பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த மற்ற ரெட்டாக்சி டிரைவர்கள், தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவிநசி – திருப்பூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஆலோசனையை பெற்று விரைவில் திர்வு வழங்குவதாகவும் போலீசார் உறுதியளித்ததின் பேரில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி போலீசாரிடம் புகார் மனுவை அளித்த ரெட்டாக்சி டிரைவர்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
