தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி பெய்து வருகிறது.இதனால் வால்பாறை, ஆழியாறு,காடம்பாறை, அப்பர் ஆழியாறு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.மேலும் ஆங்காங்கே சிற்றாறுகளும் உருவாகியுள்ளது.இந்நிலையில் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.20 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 728 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 176 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறதுகடந்த மாதம் 28ஆம் தேதி ஆழியார் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டிய நிலையில், ஆழியாறு அணை கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, இன்று ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆழியார் அணை 120 அடி கொள்ளளவில் 115 அடியை எட்டி உள்ளதால், அணைக்கரையோரம் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆழியார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஆற்றுப்படுகையை ஒட்டி பொதுமக்கள் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், மற்ற பிற தேவைகளுக்காக அணையை ஒட்டி உள்ள பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
