திருப்பூர் மாவட்டத்தில் அடைவு தேர்வில் பின்தங்கிய ஒன்றியங்களில் பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மங்களம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டிருந்தார். அடைவு தேர்வில் பின்தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அவர் இது ஒருவருக்கொருவர் குறைகளை கூறிக்கொள்ளும் கூட்டமாக இல்லாமல் கருத்துக்களை பரிமாறு கொள்ளும் கூட்டமாக எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் வருகின்ற ஆண்டுகளில் கற்றல் அடைவு தேர்வுகள் மட்டுமல்லாது 10 , 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்திலும் திருப்பூர் மாவட்டம் முதல் மூன்று இடங்களை எட்டிப் பிடிக்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , வருகின்ற ஆண்டுகளில் புரிதலோடு கற்றல் திறனை அதிகப்படுத்த இது போன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் , தொடக்க கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருடன் கருத்து பரிமாற்றம் நடத்தி அதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதள பயன்பாடுகள் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கல்வி கற்கின்ற வயதில் அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுத்துகின்ற வகையிலான ஸ்மார்ட் போன் பயன்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதனை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டுப் பொறுப்பாக கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஏற்கனவே தலைமைச் செயலர் மற்றும் நிதித்துறை அலுவலர்களுடன் பேசப்பட்டுள்ளது. அது குறித்து பகுதி நேர ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தி விரைவில் அதற்கு தீர்வு காணப்படும். மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் இது போன்றுதான் தங்கள் மதத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுவதை விட அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு அண்ணாமலை போன்றோர் ஆலோசனைகளை வழங்குவாரானால் பாராட்டக்கூடியது என தெரிவித்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகராட்சி ஆணையாளர் அமித் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து மற்றும் மாவட்ட அளவில் கற்றல் அடைவு தேர்வில் பின் தங்கிய 5 ஒன்றியங்களை சேர்ந்த 538 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர் ‌