கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஆன்லைன் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். மேலும் அதில் தனது செல்போன் எண்ணையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்ட மர்ம நபர் பல்வேறு டாஸ்க்குகளை கொடுத்துள்ளார். அப்போது அதற்கான தொகையையும் வரவு வைத்துள்ளதாக குறுஞ்செய்தியும் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த நபர் பல்வேறு தவணைகளில் ரூ.4.19 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் கூடுதல் பணம் கொடுக்க வேண்டும் என அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் ஈரோடு மாவட்டம் வட்டக்காடு பகுதியை சேர்ந்த பிரதீவ் என்பவரை கைது செய்தனர். இவர் இதே போல பலரை ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், 1 பாஸ்புக் மற்றும் 3 ஏ.டி.எம் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைன் முதலீட்டில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி கோவையை சேர்ந்த நபரிடம் ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
