சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் மணிஷ் நாரணவரே கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாணவிகள் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டருடன் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு மாணவிகள் பல்லடம் சாலையில் ஊர்வலமாக சென்று தென்னம்பாளையம் எல் ஆர் ஜி கல்லூரியில் நிறைவு செய்தனர். அங்க மாணவிகள் மத்தியில் பேசிய சக மாணவி ஒருவர் , போதைப்பொருள் பழக்கத்தினால் ஆண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவரை சார்ந்த அந்த குடும்பம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகிறது. என் தந்தையின் போதை பழக்கத்தினால் அவர் உயிரிழந்தார். அவருக்குப்பின் எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியது. அதனால் போதைப் பொருள் பழக்கத்திற்கு உள்ளானவர்களை அதிலிருந்து மீட்டு வர வேண்டும் என கண்கலங்கியபடி பேசினார். இது காவல்துறையினர் மற்றும் சக மாணவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் திருப்பூர் காதர் பேட்டை பகுதியிலுள்ள ஜெய் வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் கலந்துகொண்ட மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் , போதைப்பொருள் பழக்கம் வாழ்க்கையை சீரழித்து விடும். எனவே போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் அதில் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என மாணவிகள் மத்தியில் பேசினார்.