காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் சிரஸ்தாராக பணிபுரிந்து வந்தவர் குணசேகர். இவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருள் பாதுகாப்பு அறையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வழக்கு தொடர்பான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்த நிலையில் காரைக்கால் சிரஸ்தாராக பணிபுரிந்து வந்த குணசேகர் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட குணசேகர், காரைக்காலில் புதிதாக நியமிக்கப்பட்டவரிடம் பொருட்கள் விவரங்களை ஒப்படைக்க வேண்டும்.ஆனால் பொருட்கள் விவரங்களை ஒப்படைக்காமல் புதுச்சேரிக்கு சென்ற குணசேகர், காரைக்கால் மாவட்ட நீதிபதி பலமுறை வலியுறுத்தியும் பொருட்கள் விவரங்களை ஒப்படைக்கவில்லை. காரைக்கால் பொருள் பாதுகாப்பு அறையின் சாவியையும் ஒப்படைக்காத நிலையில் கடந்த மாதம் காரைக்கால் மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் பொருள் பாதுகாப்பு அறையின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அப்போது அறையில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்ட நீதிமன்ற அதிகாரி, புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் பொருட்களை கையாடல் செய்த குணசேகர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனையடுத்து புதுச்சேரியில் குணசேகரனை லஞ்ச ஒழிப்பு காவல்துறை போலீசார் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காரைக்கால் சிறையில் அடைத்தனர்.