எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட உலக கண்டங்களில் உள்ள மலைகளை, 25 வயதிற்குள் ஏறியவர் என்ற சாதனை படைக்க துடிக்கும் திருப்பூரை சேர்ந்த வாலிபர். தமிழக அரசு உதவ கோரிக்கை.திருப்பூர் – பெரியார் காலனியை சேர்ந்தவர்கள் விஜயகுமார் – அபிராமி. அதேபகுதியில் விளையாட்டு கேடயங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் கனிஷ் 23 வயதுடைய இளைஞர். இவர் பேட்மிட்டன் பயிற்சியாளராக இருந்து வருகிறார். நீண்ட நேர பயிற்சியின் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றால் உடல்நலக்குறைவை சரி செய்த கனிஷ், கடந்த 2022ம் ஆண்டு ஆரோக்கிய விழிப்புணர்வு எனும் சைக்கிள் பயணத்தை திருப்பூரிலிருந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை சென்று மீண்டும் திருப்பூர் என 1000 கி.மீ சைக்கிள் பயணத்தை ஆறு நாட்களில் நிறைவு செய்துள்ளார். அதனை தொடர்ந்து மலையேறுதலில் ஆர்வம் கொண்ட கனிஷ், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தான்சானியாவிலுள்ள கிளிமாஞ்சாரோ மலையை கடும் பனி, மழைக்கிடையில் ஐந்து நாட்களில் ஏறி சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்திலேயே 5642 மீ உயரமுடைய எல்பரஸ் மலையை 3 நாட்களில் ஏறி குறைந்த வயதில் எல்பரஸ் மலையை ஏறிய இளைஞர் என்ற சாதனை படைத்துள்ளார். சாதனை நிகழ்த்தி தமிழகம் திரும்பிய கனிஷை திருப்பூர் ரயில்நிலையத்தில் அவரது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சால்வை, மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.இதுகுறித்து கனிஷ் பேசுகையில்,தாங்கள் நடுத்தர குடும்ப பின்னணியை கொண்டவர்கள். தற்போது எல்பரஸ் மலை ஏறியதற்கான பொருட் செலவினை ஸ்பான்சர்கள் மூலமாக பெற்றதாகவும், அனைத்து கண்டங்களிலும் உள்ள மலைகளை 25 வயதிற்குள் ஏறியவர் என்ற சாதனையை படைத்து இந்தியாவிற்கு பெருமையை தேடித் தர வேண்டும் என அதீத ஆர்வம் உள்ளதாகவும், அதற்கான வசதிகளை செய்து தர தமிழக அரசு உதவ வேண்டும் என தெரிவிக்கும் கனிஷ், மேற்கொண்டு தனக்கு உதவிகள் கிடைத்தால் தனது சாதனையை விரைவில் செய்து முடித்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடி தருவேன் என தெரிவித்தார்.
