கடந்த 24 ஆம் தேதி கொச்சி அருகே அரபிக்கடல் பகுதியில் லைபீரியா நாட்டு MSC Elsa 3 என்ற சரக்கு கப்பல் 643 கண்டைனர்களுடன் கடலில் மூழ்கிய விபத்தில் ரசாயன பொருட்கள் அடங்கிய கண்டைனர்கள் கடலில் மிதந்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் சில கண்டைனர்கள் கேரளா கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. இந்நிலையில் ஆயில் படலம் கடலில் படர்ந்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை பாதுகாப்பாக கடலில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று சாக்கு மூடைகளில் சில பொருட்கள் கன்னியாகுமாரி மாவட்டம் இனயம் சின்னத்துறை கடல் பகுதியில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்க உத்தரவிட்டார். மேலும் அந்த சாக்கு மூடைகளை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் துபாய் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் எண்பது தெரிய வந்தது. மேலும் இது போன்ற ஏதேனும் பொருட்கள் கரை ஒதுங்கினால் அதனை பொது மக்கள் யாரும் தொட அனுமதிக்க கூடாது எனவும் கடலோர பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று குளச்சல் அருகே வாணியக்குடி கடல் பகுதியில் கண்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுமேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய பொருட்கள் ஆயிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாஸ்க் வழங்கி மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கண்டைனரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
