கோவை கே.ஜி.சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் காலை 5 முதல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை – கேரளா எல்லையான கே.ஜி.சாவடி ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் உள்ள ஸ்டோர் ரூமில் இருந்த பிரிட்டர் பெட்டியில் ரூ.1 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த மேஜைகளில் ரூ.17 ஆயிரம், மற்றும் மோட்டர் வாகன ஆய்வாளர் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயசந்திரன் லோகநாதனிடம் விசாரனை மேற்கொண்டனர்.
அதே போல பொள்ளாச்சி கேரளா எல்லையான கோபாலபுரம் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட போலீசார் பதிவு அறை மற்றும் மேஜையில் இருந்து ரூ.66 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து, மோட்டார் வாகன ஆய்வாளர் தமிழ்செல்வி, உதவியாளர் சிவகுருவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
