தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சடையன்கிணறு காலனியில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் தாமாக முன்வந்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது வெளியேறும் கழிவுநீர் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், குடிநீர் தொட்டிகளை உரிய நேரங்களில் சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் பழங்குளம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சடையன்கிணறு காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.விவசாய கூலி பணியாளர்கள் அதிகம் வாழும் இக்கிராம மக்களின் குடிநீர் நீர் ஆதாரமாக 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆற்றுநீர் குடிநீர் தொட்டி உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த குடிநீர் தொட்டியை கிராம மக்கள் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்களும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கலங்கிய நிலையில் வரும் தண்ணீரை குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனால், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என பொது மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகள் மாதம் தோறும் சுத்தம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பொதுமக்களே களமிறங்கி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தனர். அப்போது சாக்கடை நீராக வெளியேறிய தண்ணீரை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாமாக முன்வந்து பொதுமக்கள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது வெளியேறும் கழிவுநீர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், குடிநீர் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை உரிய நேரங்களில் சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சாத்தான்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து கூறுகையில்,

சடையங்கினறு காலனியில் நூறு குடும்பங்கள் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்கள் நல்ல தண்ணீர் குடிப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போராடி 5000 லிட்டர் கொள்ளளவு உள்ள சின்டெக்ஸ் டேங்க் பெற்றுள்ளனர். அதை வைத்த நாளில் இருந்தே அதை சுத்தம் செய்தார்களா என்பது தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யாமல் சுத்தம் செய்ததாக அதற்கான ஊதியத்தை எடுத்துள்ளனர். சுத்தம் செய்யாததால் குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களை சிகிச்சைக்காக சாத்தான்குளம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தாலும் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாததால் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ள இந்த காலகட்டத்தில் சடையன்கிணறு காலனி கிராம மக்கள் கேட்பாராற்ற நிலையில் உள்ளனர். தினமும் உழைத்து வாழக்கூடிய மக்களை கண்டு கொள்ளாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

சாக்கடை கழிவு நீரை இளைஞர்களே சுத்தம் செய்யும் அளவிற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளாக சாக்கடை நீரை குறித்த மக்களுக்கு பலவிதமான நோய்கள் வந்திருக்கும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையினர் நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். என்றார் அவர்.