விராலிமலையில் பயன்பாடற்று கிடக்கும் அம்மன் (மலன்) குளம் நடைபாதையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடைபயிற்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அம்மன் குளக்கரையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் அவசரகதியில் முறையான கட்டமைப்பு இல்லாமல் தரம் இன்றி அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது பயன்பாடற்று கிடப்பது நடைபயிற்சியார்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்து கிடக்கும் பாதையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று நடைபயிற்சியாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராலிமலை-திருச்சி சாலையில் காமராஜர் நகர் அருகே சுமார் 16 ஏக்கரில் பரந்து விரிந்த அம்மன் குளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பாதுகாப்பு வேலியுடன் நடைபாதை மற்றும் பாதையின் ஓரத்தில் ஆங்காங்கே சிமென்ட் இருக்கைகள் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் மாநில நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் தரமற்ற பொருட்கள் கொண்டு அவசரகதியில் தொடங்கிய பணிகள் தொடங்கிய சிறிது நாட்களிலேயே முடிக்கப்பட்டதாக காட்டப்பட்டது. இதனால் அன்று முதல் இன்று வரை அந்த பாதையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மருத்துவர்கள் அறிவுரைபடி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் இந்த நடைபாதை பயன்பாட்டில் இல்லாததால் ஆபத்தை உணராமல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வப்போது சிறு விபத்துகள் நேரிடுகிறது.
எனவே, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் இப்பிரச்சினையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் ஊராட்சி நிர்வாகத்தை முடுக்கி விட்டு நட பாதையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள பயிற்சியாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
