திண்டிவனம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இரண்டு திறந்தவெளி கிணறுகளால் விபத்து அபாயம். பெயரளவில் மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்திய நெடுஞ்சாலைத்துறை. விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கார் கட்டுப்பாட்டிலிருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததன் எதிரொலியாக நெடுஞ்சாலையோர கிணறுகள் ஆய்வு செய்து கணக்கெடுக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே செல்லும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் சுமார் 500 மீட்டர் இடைவெளிகளில் இரண்டு திறந்த வெளி கிணறு உள்ளது. இவை இரண்டையும் பெயரளவில் சாலையோரம் மண் கொட்டி உள்ளனர். இந்த திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் சென்ற வண்ணம் உள்ளது. இந்த இரு திறந்தவெளி கிணறுகளால் விபத்து அபாயமும் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சாலையோர திறந்தவெளி கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிர்பான பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
