திருப்பூரில் நேற்று தேர்வு முடிவு வெளியாகும் என அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் இன்று தேர்ச்சி அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் – பிரியா தம்பதியர் திருப்பூர் சூசையாபுரம் கிழக்கு பகுதியில் தங்கி பணியின் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர் இவர்களது மூத்த மகன் கோவை கல்லூரியில் பயின்று வருகிறார். இளைய மகன் பாலகணேஷ்(16) 11 ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதி விட்டு தேனிக்கு சென்ற நிலையில் 1 மாதம் கழித்து நேற்று திருப்பூர் வந்துள்ளார். வீட்டில் தாய் தந்தை இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்ற நிலையில் பாலகணேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகன் ஊரில் இருந்து வருவதாக கூறிய நிலையில் வந்து விட்டாரா என பார்க்க தந்தை கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்த போது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் மாணவன் பாலகணேஷ் பத்தாம் வகுப்பு தேர்வில் ஒருு மறை தோல்வி அடைந்து மீண்டும் முயற்சித்து பின்னர் தேர்ச்சி அடைந்து 11-ம் வகுப்பு படித்து வருவதாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அச்சத்தில் இதுபோன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் பாலகணேஷ் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் அனைத்திலும் தேர்ச்சி அடைந்து 12-ம் வகுப்புக்கு சென்றுள்ளார் ஆனால் மாணவரின் அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மாணவர்கள் பதட்டம் அடைய வேண்டாம் அச்சப்படக்கூடாது என தொடர்ந்து அரசு மற்றும் பள்ளி தரப்பில் இருந்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டாலும் மாணவர்கள் இறுதி நேரங்களில் இது போன்று அவசரப்பட்டு எடுக்கும் முடிவு மாணவர்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.