திருப்பூர் மாநகராட்சி அரசு பள்ளி மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்.
திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபு- மாலதி தம்பதியர் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகன் வீர மணிகண்டன் நெசவாளர் காலனி நகரவை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். பத்தாம் தேர்வு முடிவுகள் வெளியானதில் அரசு பள்ளியில் பயின்ற வீர மணிகண்டன் 497 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 99 மதிப்பெண்கள் என 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற வீர மணிகண்டனுக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரசு பள்ளி மாணவர் ஒருவர் திருப்பூரில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று இருப்பது அரசு பள்ளிகள் மீதான ஈர்ப்பை மற்ற பெற்றோர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது மேலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
