மணப்பாறையில் இருசக்கர வாகனங்களை திருடிய மூன்று பேரும் அதனை பிரித்து உதிரிபாகங்களாக விற்பனை செய்த மெக்கானிக்கும் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காய்கறி மார்க்கெட், சந்தை, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படும் சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் கே.உடையாபட்டியைச் சேர்ந்த அருள் அபினேஷ், கீழ பொய்கைப்பட்டியைச் சேர்ந்த நிதிஷ்குமார், கலிங்கபட்டியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் ஆகிய மூவரும் திருடி கொண்டுவரும் இருசக்கர வாகனங்களை நடுப்பட்டியைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் கிருஸ்துராஜ் என்பவர் வண்டியை தனித்தனியாக பிரித்து அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கணிப்பொறியை திருடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், கணிப்பொறி ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
