ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 25க்கும் மேற்பட்டோரிடம் 10.26 லட்ச ரூபாய் பணத்தை வசூலித்து ஏமாற்றிய இளம்பெண் கைது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த ஜோதி @ மாதுரி என்பவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக பணியாற்றி வருவதாகவும், கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனையில் ஹெல்பர், லேப் டெக்னீசியன், மனநல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காலியாக இருப்பதாகவும் தம்மிடம் பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் வேலை எனக் கூறி 25க்கும் மேற்பட்டோரிடம் 10.26 லட்சம் ரூபாய் வரை ஜோதி பண வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராததால் ஜோதியிடம் முறையிட்டபோது இது குறித்து முறையாக பதிலளிக்கவில்லை.
இதனால் பணத்தை கொடுத்து ஏமாந்த புங்கம்பேடு கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஆவடி காவல் ஆணையரக குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் ஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
