அவிநாசியில் பாடல் பெற்ற தலமான அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவில் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேரான அவிநாசிலிங்கேசுவரர் கோயில் பெரிய தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேர்கொண்டதும், சுந்தரமூர்த்தி நாயணாரால் பாடல் பெற்றதும், கொங்கேழு சிவாலயங்களுள் முதன்மைபெற்றதும், என்பது மட்டுமல்லாமல் “காசியில் வாசி அவிநாசி” என்ற போற்றுதலுக்குரியதும் பழமைவாய்ந்ததுமான அருள்மிகு ஸ்ரீ கருணாம்பிகையம்மன் உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறும்.இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதை முன்னிட்டு நாள்தோரும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.இந்நிலையில் முக்கிய தினமான இன்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்வில் பெரிய தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

அரங்காவலர் குழு தலைவர் பப்பீஸ் சக்திவேல், அறங்காவலர்கள், பேரூராட்சி தலைவர், அறநிலையத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், மடாதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதைத் தொடர்ந்து அவிநாசிலிங்கேசுவரர் கோயில் பெரிய தேரை ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்து தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.

பகல் 01.00 மணி வரை இழுக்கப்பட்டு மேற்கு ரத வீதி எல்லையில் நிறுத்தப்படும்.இதையடுத்து நாளை காலை மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து பிற்பகலுக்குள் நிலை நிறுத்தப்படும்.ரத வீதிகளில் ஆடி அசைந்தவாறு தேர் வருவதை கண்ட பக்தர்கள் அரோகரா, ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டுமளவு பக்திப்பரவசத்துடன் கோஷமிட்டனர்.முன்னதாக திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்தரை பக்தர்கள் தேரின் மீது ஏறி தரிசித்தனர்.

தேரோட்டத்தின் போது திருவீதிகளில் சாலையோரம் ஆங்காங்கே மக்களின் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.மேலும் பல்வேறு சமூகத்தாரின் மண்டபங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்விழாவிற்கு, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.விழாவில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும்,முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.மருத்துவ அவசர உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் தேரின் பின் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மறுதினம் காலை அம்மன் தேர் எனப்படும் சின்னத் தேர் வடம்பிடித்து இழுத்து பிற்பகலுக்குள் நிலை நிறுத்தப்படவுள்ளது.