பல்லடம் அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் தோட்டா தயாரிக்கும் வெடிமருந்து ஆலையில் பயங்கர வெடி விபத்து-வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த குடோன் தரைமட்டம்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட எல்லை பகுதியான மல்லேகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜ் என்பவருக்கு சொந்தமான ராணுவத்திற்கு தோட்டா தயாரிக்கும் வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. வெடிமருந்து இருப்பு வைக்கும் குடோன்கள் இந்த ஆலைக்குள் நிறுவப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த ஒரு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. மேலும் இந்த வெடி சத்தம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை கேட்டுள்ளது.
மேலும் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தின் எல்லை பகுதியில் இந்த ஆலை அமைந்துள்ளதால் காமநாயக்கன்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை தவிர வேறு யாருக்கும் ஆலைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் எத்தனை கிலோ வெடி மருந்துகள் வெடித்துள்ளது என்பது குறித்தும் காவல்துறையின் விசாரணைக்கு பின்பு தெரியவரும்.
