பொன்னேரி அருகே நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழை. பலத்த காற்றின் போது மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதம். வீட்டில் இருந்தவர்கள் மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளான நேற்று மாலை சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

அப்போது சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தின் பாதி கிளை முறிந்து அருகே இருந்த வீட்டின் மீது விழுந்தது. ஓடு வேய்ந்த வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததால் வீட்டிற்குள் ஓடுகள் சிதறி விழுந்த போது வீட்டிற்குள் இருந்த தாய் மகாலட்சுமி மற்றும் மகன்கள் மோனிஷ், மல்லீஷ் ஆகிய மூவரும் அலறி அடித்தபடி வெளியே ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

பலத்த காற்றால் வீடு சேதம் அடைந்துள்ள நிலையில் அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.