ஈரோடு அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிராமங்கள் வாரியாக வசிப்பிடங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.. இந்த பணியில், ஈரோடு போலீசாருடன், நீலகிரி, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்..

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியினர் ராமசாமி பாக்கியம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெருந்துறை காவல் உட்கோட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக வசிப்பவர்கள், முதிய தம்பதியினர்,வட மாநிலத்தவர், தனியாக உள்ள வீடுகள், கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள குடியிருப்புகள், வாடகைக்கு புதிதாக வந்தவர்கள், சந்தேகப்படும்படியான நபர்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
மேலும், கடந்த 24 ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரையிலான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்கின்றனர்.

பெருந்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சி கோவில், பெருந்துறை சென்னிமலை வெள்ளோடு, அரச்சலூர், சிவகிரி கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த பணியில் உள்ளூர் போலீசாருடன் நீலகிரி நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 250 போலீசார் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று தொடங்கிய இந்த பணி தொடர்ந்து நான்கு-ஐந்து தினங்களுக்கு நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.