நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் ; இதுவரை 17 மீனவர்கள் சிகிச்சைக்காக அனுமதி .மேலும், கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் படுகாயமடைந்த மீனவர்கள் கரைத் திரும்ப முடியாமல் தவிப்பதாக தகவல்.
படக்காமீனவர்கள் துறைமுகம், காயமடைந்த மீனவர்கள்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது மீனவ கிராமங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவர் உட்பட முரளி , சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை அதிவேக படகில் வேகமாக வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தி கத்திமுனையில் தாக்குதலை நடத்தினர்.
ஆயுதங்களால் தாக்கி மீனவர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல அடுத்தடுத்து சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் செருதூர் கிராமத்தை சேர்ந்த 7 மீனவர்கள், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரைத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி , ராடு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கிதாகவும் காயமடைந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாகை மாவட்ட மீனவர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி சுமார் 10 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்களை கொள்ளையடித்துத் தப்பிசென்றுள்ள இலங்கை கடற்கொள்ளையர்களின் செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.