உளுந்தூர்பேட்டை பகுதியில் சம்மங்கி பூ செடியில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிப்பதாக விவசாயிகள் கவலை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள ஆசனூர், கிளியூர், ரகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் சம்பங்கி பூ செடியை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது செடியில் பூ வைக்கும் தருவாயில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆசனூர் கிராமத்தை சேர்ந்த சம்பங்கி பூ பயிரிடும் விவசாயி ரவி என்பவர் கூறிய போது தற்போது கோடை காலத்தில் சம்மங்கி பூச்செடிக்கு தண்ணீர் பாய்ச்சி வளர்ப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வரும் நிலையில், செடி வளர்ந்து தற்போது பூ பூக்கும் தருவாயில் சம்பங்கி பூ செடியை சுற்றி மஞ்சள் கொடி படர்ந்து அதில் இருந்து வரும் பூச்சிகள் பூவை தாக்குவதால் மகசூல் வெகுவாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் சம்பங்கி பூவின் விலை ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விலை போகும் நிலையில் நோய் தாக்குதல் காரணமாக மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள சம்பங்கி பூ பயிரிட்டுள்ள தோட்டங்களில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
