தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் புகுந்து பைபிள் பாடம் எடுக்கும் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய போதை கும்பலில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு, சாயர்புரம் அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்த சாமுவேல் அந்தோணிராஜ் என்பவர் பணியாளராகவும், விடுமுறை நாட்களில் கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் எடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் அங்கு சென்று பைபிள் குறித்து பாடம் கற்று வருகின்றனர். ஊரணி ஒத்தவீடு பகுதியை சேர்ந்த 16 வயது இளம்சிறார் ஒருவர் இன்று பைபிள் வகுப்புக்கு சென்றுள்ளார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

போதையில் நிலைதடுமாறிய நிலையில் இருந்த அவரை பைபிள் ஆசிரியர் சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்ததால் அந்த சிறுவன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். சிறிது நேரத்தில் நண்பர்கள் சிலருடன் அங்கு வந்த அந்த சிறுவன் சாமுவேல் அந்தோணிராஜிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அனைவரும் போதையில் இருந்துள்ளனர்.
சிறுவனிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே விடுவோம் என அவர்கள் கூறியதால் அச்சமடைந்த சாமுவேல் அந்தோணிராஜ் வேறுவழியின்றி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இருப்பினும், போதையில் இருந்த அவர்கள் அங்கிருந்த கல்லை எடுத்து சர்ச் வளாகத்தில் வீசி உள்ளனர்.
அப்போது, திடீரென முகமது என்ற வாலிபர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சாமுவேல் அந்தோணிராஜின் தலையில் வெட்டியுள்ளார். அவரது செல்போனையும் பிடுங்கி உடைத்துள்ளனர். அரிவாளால் வெட்டப்பட்ட சாமுவேல் அந்தோணிராஜ் கூச்சலிட்டதால் சர்ச்சில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். 5 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். காயமடைந்த அவரை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தெர்மல்நகர் போலீசார் தப்பியோடியவர்களில் முகமதுவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் புகுந்து பைபிள் பாடம் எடுக்கும் ஆசிரியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.